your doomsday middle mags

Sunday, March 8, 2009


பவுண்டுடன் ஒரு பேட்டி(பாரிஸ் ரெவ்யூ பேட்டிகளிலிருந்து)

1942ஆம் ஆண்டு பவுண்ட் இறப்பதற்கு முன்பாக Paris Review பத்திரிகைக்கு அவர் ஒரு பேட்டி அளித்தார். பேட்டி நடந்த இடம் ரோம் நகரம். பேட்டி மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பவுண்டிடம் இருந்த மூன்று புத்தகங்கள் Faber வெளியீடான பவுண்டின் The Cantos, கன்பியூசியஸ், ராபின்சன் எடிட் செய்த Chaucer ன் காவியம்.
பேட்டி கண்டவர் : டோனால்ட் ஹால்.

பேட்டி காண்பவர் : நீங்கள் கேண்டோக்களைத் தொடங்கியது 1916 லா?

பவுண்ட் : ஏறத்தாழ 1904இல் என்று கருதுகிறேன். 1904இல் அல்லது 1905இல் தொடங்கி நான் பல வேறு திட்டங்களை வைத்திருந்தேன். தேவையான விஷயங்களை ஏற்பதற்குத் தகுந்த விரிவடையும்படியான ஒரு வடிவத்தைத் தேடுவதே பிரச்சனையாக இருந்தது. அந்த வடிவம், அதற்கு உள் பொருந்தவில்லை என்பதற்காக எதையும் தவிர்ப்பதாக இருக்கக் கூடாது . . .

பே. கா : நீங்கள் இப்பொழுது ஒரு கேண்டோவை எழுதினால், அதை எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்? ஒவ்வொன்றுக்கும் தகுந்தவாறு ஏதாவது படிக்கிறீர்களா?

பவுண்ட் : கட்டாயத்திற்கு ஒருவர் படிப்பதில்லை. ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையின் மீது ஒருவர் கவனம் செலுத்துகிறார். எனக்கு முறை பற்றித் தெரியாது. என்ன என்பதுதான் எப்படி என்பதைவிட மிகவும் முக்கியமானது.

பே.கா : இருப்பினும், நீங்கள் ஒரு இளைஞனாய் இருந்தபோது உங்களின் கவிதை மீதான ஈடுபாடு முழுவதும் வடிவத்திலேயே குவிந்திருந்தது. உங்கள் தொழில் திறன், உத்தியில் உங்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு யாவும் பரந்த அளவுக்குப் பேசப்பட்டது. இந்தக்கடைசி 30 வருடங்களில் உங்களின் வடிவத்திற்கான ஈடுபாட்டினை உள்ளடக்கத்தின் ஈடுபாட்டிற்குப் பதிலியாக பரிமாற்றம் செய்திருக்கிறீர்கள். இந்த மாற்றம் கொள்கை அளவிலானதா?

பவுண்ட் : நான் அதைப் பற்றிக் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். நேர்மையின் சோதனையே உத்தி. ஒரு விஷயம் ஒரு உத்தியின் வழியாகச் சொல்லப்படுவதற்குத் தகுதி இல்லாதிருப்பின், அதன் மதிப்புகள் தாழ்ந்ததாக இருக்கும்.

பே. கா : நீங்கள் ‘சுதந்திரக் கவிதையை’ குறிப்பாக ஒரு அமெரிக்க வடிவம் என்று நினைக்கிறீர்களா? ஈரசைச் செய்யுளை (iambics) ஆங்கில இலக்கியம் தொடர்பானதென்றும், சுதந்திரக் கவிதையை அமெரிக்க வடிவம் என்றும் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் கருதுவதாக நான் நினைக்கிறேன்.

பவுண்ட் : “நல்ல கவிதையை எழுத விரும்பும் எவருக்கும் யாப்பு முறை விடுதலையாகாது” என்ற எலியட்டின் வாக்கியம் எனக்குப் பிடிக்கிறது. சிறந்த சுதந்திரக் கவிதை என்பது அளவிடப்பட்ட சீர் ஒழுங்குக்குத் திரும்புதலுக்கான முயற்சியில் வருகிறது என்று நான் நினைக்கிறேன்.

பே. கா : உங்கள் எழுத்துக்களில் மாபெரும் அனுபவத்தின் வீச்சும், அதே நேரத்தில் வடிவமும் இருக்கிறது. இதில் எந்தக் குணம்சத்தை ஒரு கவிஞனின் தலை சிறந்ததாக நீங்கள் கருதுவீர்கள்? அது வடிவமா இல்லை சிந்திக்கும் தரமா?

பவுண்ட் : தேவையான குணம்சங்களை வரிசைப்படியான அடுக்கில் வைத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் கவிஞனுக்குத் தொடர்ந்து தேடும் ஆர்வம் வேண்டும். அது மட்டுமே அவனை எழுத்தாளனாக ஆக்காது. ஆனாலும் அது இல்லையென்றாலும் அவன் சிதைந்து போய்விடுவான். எழுதுவதைப் பற்றிய எதுவுமே இடைவிடாத சக்தியில் சம்மந்தப்பட்டிருக்கிறாய். Agassiz போன்ற ஒரு மனிதன் என்றுமே சலித்துப் போவதில்லை. தூண்டுதல்களைப் பெறுதலில் ஆரம்பித்து அவற்றை இணைத்தலுக்கும், பதிவு செய்தலுக்கும் உள்ள இடைப்பட்ட பயணம்தான் ஒரு வாழ்க்கையின் சகல சக்தியையும் எடுத்துக் கொண்டு விடுகிறது.

பே. கா : குறிப்பாக நீங்கள் இளைஞனாய் இருந்தபோழுதும், கேண்டோக்களிலும், உங்கள் கவிதையின் வெளிப்பாட்டு முறையை மாற்றிக் கொண்டே போனீர்கள். எந்த இடத்திலும் நிலையாக நின்றுவிடுவதில் நீங்கள் திருப்தி அடையவில்லை. கலைஞன் மாறுதலுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்க வேண்டுமா?

பவுண்ட்: கலைஞன் மாறுதல் அடைந்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். மனிதர்களுக்கு சலிப்பு ஏற்படாதவாறு வாழ்க்கையைத் தருவதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்; நீங்கள் பார்ப்பதை எழுத முயலுகிறீர்கள்.

பே. கா : உங்கள் வாழ்க்கை முழுவதும் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறீர்கள். இப்பொழுது பிரத்யேகமாக அவர்களுக்குச் சொல்வதற்கு ஏதும் உள்ளதா?

பவுண்ட் : அவர்கள் தங்களின் தேடும் ஆர்வத்தை கூடுதலாக்கிக் கொள்ள வேண்டும். பொய்யாக உருவாக்கக் கூடாது. ஆனால் அது மட்டும் போதாது. வயிற்று வலியைப் பற்றி மட்டும் எழுதிவிடுவதோ, அல்லது குப்பை கூளங்களை எழுத்தில் கொண்டு வருவதோ மட்டும் போதாது.

பே.கா : வாழும் இலக்கிய முன்னோடிகளான தாமஸ் ஹார்டி, யேட்ஸ், ஃபோர்டு மேடாக்ஸ் ஃபோர்டு, ராபர்ட் பிரிட்ஜஸ் இவர்களிடமிருந்து நான்கு பயனுள்ள குறிப்புகளைப் பெற்றதாக நீங்கள் ஒருமுறை எழுதினீர்கள். அக்குறிப்புகள் என்னென்ன?

பவுண்ட் : பிரிட்ஜஸிடமிருந்து எனக்குக் கிடைத்த குறிப்பு எளிமையானது. ஒரே உச்சரிப்பைக் கொண்ட சொற்களுக்கு எதிரான எச்சரிக்கை அது. ஹார்டியினுடையது அவர் எந்த அளவுக்கு வெளிப்பாட்டு முறையை விட விஷய அம்சத்தில் ஆழ்ந்த தீவிரம் காட்டுவார் என்பது. போர்டினுடையது பொதுவாக மொழியின் புத்துணர்ச்சியைப் பற்றியது. நீங்கள் நான்காவதாகக் குறிப்பிட்டது யேட்சைத்தானே? ஆம், 1908ஆம் வருட காலத்தில் வார்த்தைகளின் இயற்கையான ஒழுங்கிலிருந்து விலகாமல் எளிய உணர்ச்சிப் பாடல்களை எழுதியிருந்தார் யேட்ஸ்.

பே. கா : நீங்கள்1913-லும், 1914-லும், யேட்சுக்கு காரியதரிசியாக இருந்திருக்கிறீர்கள். என்னவிதமான வேலைகளை அவருக்கு நீங்கள் செய்தீர்கள்?

பவுண்ட் : பெரும்பாலும் உரக்க வாசிப்பது, Dowty யின் Dawn in Britain மற்றும் இது போன்று ; மேலும் உரத்த விவாதங்கள். ஐரிஷ்காரர்களுக்கு முரண்பாடுகள் பிடித்தமானவை. யேட்ஸ் நாற்பத்து ஐந்தாவது வயதில் கத்திச் சண்டை பயில முயன்றார். அது மிகவும் வேடிக்கையானது. ஒரு திமிங்கலத்தைப் போல வீசியபடி தன் மெல்லிய கத்திகளுடன் வருவார். என்னைவிட மோசமான முட்டாள் போன்ற தோற்றத்தினை சில சமயங்களில் தந்தார்.

பே. கா : உங்களின் யேட்ஸ் மீதான தாக்கத்தைப் பற்றி ஒரு கல்வியியல் கருத்து வேறுபாடு இருக்கிறது. அவருடன் சேர்ந்து அவரின் கவிதைகளைச் சீரமைத்தீர்களா? நீங்கள் The Waste Land ஐ வெட்டியதைப் போல யேட்சின் கவிதைகளை வெட்டினீர்களா?

பவுண்ட் : அந்த மாதிரி எதையும் என்னால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ராபல்லோவில் இருக்கும்போது ஒருமுறை, அவர் ஒரு விஷயத்தை அச்சாக்கம் செய்வதைத் தடுக்க நல்லதைக் கருதி முயன்றேன். அது குப்பை என்று அவரிடம் கூறினேன். யேட்ஸ் செய்ததெல்லாம் நான் அதைக் குப்பை என்று சொன்னதான குறிப்புகளுடன் அதை அச்சேற்றியதுதான். யேட்சிற்குள் நடந்த மாற்றத்திற்குக் காரணம் ஃபோர்டு மேடாக்ஸ் ஃபோர்டு தான் என்று நான் நினைக்கிறேன். யேட்ஸ் எல்லாமே ஃபோர்டின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டிருந்திருக்க மாட்டார். ஆனால் என் வழியாக யேட்ஸ் இயல்பாய் எழுதும் ஒரு முறைக்கு மாற ஃபோர்டு உதவினார் என்று நினைக்கிறேன்.

பே. கா : உங்களுக்கு ஓவியர்களான Gaudier-Brzeska, Wynham Lewis போன்றவர்களுடனும் வோர்ட்டிசிச(Vorticism) இயக்கத்திலும் பிறகு Picabia,Picasso போன்றவர்களுடனும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஒரு எழுத்தாளர் என்ற வகையில் இந்த தொடர்பு உங்களுக்கு ஏதும் பயன்பட்டிருக்கிறதா?

பவுண்ட் : அப்படி ஏதும் நான் நம்பவில்லை. கேலரிகளில் ஓவியங்களைப் பார்க்கும் போது ஒருவர் ஏதாவது கண்டுபிடித்திருக்கலாம். The Game of Chess கவிதை நவீன அரூப ஓவியத்தின் பாதிப்பைப் காட்டுகிறது. என்னுடைய கோணத்திதலிருந்து கட்டமைப்பு பற்றிய அறிவைப் புதுப்பிக்கிறது வோர்ட்டிசிசம். வர்ணங்கள் இறந்து போன போது மேனேவும்(Manet) மற்ற இம்ப்ரஷனிஸ்டுகளும் அதை மறு உயிர்ப்பூட்டினார்கள். நான் சொல்கிற மாதிரி, அதன்பிறகு வடிவத்தைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டது. க்யூபிசத்திற்கு மாறாக, வோர்ட்டிசிசம் வடிவம் பற்றிய உணர்வை உயிர்ப்பூட்டும் முயற்சியே. விகிதாசாரங்கள், அமைப்பு ஒழுங்குகள் பற்றி Pierro della Francescaவின் கட்டுரை பேசும்போது வடிவம் பற்றிய உணர்வு நமக்குக் கிடைக்கிறது. ஒப்புமை வடிவங்கள் பற்றிய உணர்வு நான் அமெரிக்காவை விட்டு வெளியேறுமுன் எனக்கு கிடைக்கத் தொடங்கியது.

பே. கா : நீங்கள் ஒரு கவிஞனாகத் தொடங்கியது எவ்வாறு?

பவுண்ட் : என் தாத்தா ஒரு பக்கம் உள்ளூர் வங்கித் தலைவருக்குக் கவிதையில் கடிதம் எழுதினார். என்ஷ் பாட்டியும், இன்னோரு பக்கம் அவர் சகோதரர்களும் கடிதங்களில் மாறி மாறி கவிதையைப் பயன்படுத்தினார்கள். எவரும் கவிதை எழுத முடியும் என்று அப்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

பே.கா : ஒரு கவிஞன் என்ற முறையில் உங்கள் பல்கலைக் கழகப் படிப்பிலிருந்து ஏதும் கற்றுக் கொண்டீர்களா? ஆறு அல்லது ஏழு வருடங்கள் நீங்கள் மாணவராக இருந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பவுண்ட் : இல்லை. ஆறு வருடங்கள் தான். ஆறு வருடங்களும் நான்கு மாதங்களும். என்னுடைய பதினைந்தாவது வயதில், ஒரு பொதுக் கணக்கெடுப்பு செய்வதற்கு எனக்குக் கருத்து இருந்தது. நான் கவிஞனாக இருந்தேனா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது கடவுளர்களுக்கான விஷயம்.

பே. கா : என் ஞாபகப்படி நீங்கள் நான்கு மாதம் மட்டுமே ஆசிரியர் வேலைபார்த்தீர்கள். ஆனால் இப்பொழுது அமெரிக்காவில் பெரும்பாலான கவிஞர்கள் ஆசிரியர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்துவதற்கும் கவிதை எழுதுவதற்கும் உள்ள தொடர்பு பற்றி உங்களுக்கு எதுவும் கருத்துக்கள் உண்டா?
பவுண்ட்: இது ஒரு பொருளாதார அம்சம். ஒரு மனிதன் தன் வாடகையை எப்படியாவது சம்பாதிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

பே. கா: நீங்கள் ஐரோப்பாவிற்கு வந்து வாழும் எழுத்தாளர்களில் சிறந்தவர்களுடன் உங்களை வெகு சீக்கிரத்தில் தொடர்புபடுத்திக் கொண்டது வியக்க வைக்கிறது. நீங்கள் அமெரிக்காவை விட்டு வரும்போது அங்கு எழுதிக் கொண்டிருந்த கவிஞர்கள் யாரையாவது அறிந்திருந்தீர்களா? ராபின்சனை நீங்கள் ஒரு பொருட்டாகக் கருதினீர்களா?

பவுண்ட்: அய்க்கன் என்னிடம் ராபின்சனை சிபாரிசு செய்யப் பார்த்தார். நான் இணங்கவில்லை.ஒரு வருடம் கழித்தோ என்னவோ, எலியட்டைச் சந்தித்தேன். . இல்லை, நான் லண்டன் சென்றதற்குக் காரணம் வேறு எவரையும் விட கவிதை பற்றி யேட்சுக்கு அதிகம் தெரியும் என்று நினைத்ததுதான். மதியத்தில் ஃபோர்டைப் பார்ப்பதற்கும், மாலையில் யேட்சைப் பார்ப்பதற்குமாக லண்டனில் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன். ஒருவரிடம் மற்றவரைப் பற்றிச் சொல்லும்போது எப்போதும் ஒரு விவாதத்தைத் துவக்கலாம். அதுதான் பயிற்சி. ஆனால் ஃபோர்டு யேட்சிடமிருந்து மாறுபட்டார் என்பதைக் கண்டுபிடித்தேன். அப்படியே அவர்கள் இருவருடனும் மறுதலித்தபடி இருபது வருடங்கள் கழித்தேன்.

பே.கா : நிதி சீர்திருத்தம் ஒரு நல்ல அரசுக்குப் பிரதானமானதென்று நீங்கள் கருதுவது எனக்குத் தெரியும். என்ன வழியில் நீங்கள் அழகியல் பிரச்சனைகளிலிருந்து அரசு ரீதியான பிரச்சனைகளுக்கு மாறீனீர்கள் என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. உங்களில் பல நண்பர்களை அழித்து ஒழித்த பெரும் போர் இந்த மாறுதலை உண்டாக்கியதா?

பவுண்ட்: பெரும்போர் ஒரு பெரிய அதிர்ச்சியாக வந்தது. எதுவும் செய்திராத ஆங்கிலேயர்கள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு அந்த யுத்தத்தைப் போரிட்டது மிகவும் ஈர்ப்பு மிக்கது. ஆனால் போர் முடிந்தவுடன் அவர்கள் செயல் இழந்து போனார்கள். அதன் பிறகு ஒருவர் இரண்டாவது போரைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் அடுத்து இருபது வருடங்களைக் கழிக்க வேண்டியிருந்தது. போரைத் தனியான ஒரு நிகழ்வாகப் பார்க்காமல், ஒரு அமைப்பின் பகுதியாக ஒன்றன் பின் ஒன்றாக வரும் நிகழ்ச்சியாகப் பார்க்க The New Age பத்திரிக்கை அலுவலகம் எனக்கு உதவியது.

பே. கா: இலக்கியத்தையும் அரசியலையும் இணைக்கும் உங்கள் எழுத்தின் ஒரு அம்சம் எனக்கு ஆர்வமூட்டுகிறது. A.B.C of Reading நூலில், நல்ல எழுத்தாளர்களின் பணி ஒரு மொழியைத் திறனுள்ளதாக வைத்துக் கொள்வது என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் பணியைக் கட்சியிலிருந்து பிரித்துக் காண்கிறீர்கள். தவறான கட்சியைச் சேர்ந்த மனிதன் மொழியைத் திறமையாகப் பயன்படுத்த முடியுமா?

பவுண்ட்: ஆம். அதுதான் முழுப்பிரச்சனையுமே யார் பயன்படுத்துகிறார்கள் என்பது விஷயமல்ல. ஒரு துப்பாக்கி திறமையாகவே சுடும்.

பே. கா: ஒழுங்குள்ள ஒரு கருவி ஒழுங்கின்மையை உண்டாக்க முடியுமா? மோசமான அரசை ஆதரிக்க நல்ல மொழி பயன்படுத்தப்பட்டால்? மோசமான அரசு மோசமான மொழியை உண்டாக்குவதில்லையா?

பவுண்ட்: ஆம். மோசமான மொழி தன் இயல்புக்கும் கூடுதலாக ஒரு மோசமான அரசை உண்டாக்கியே தீரவேண்டி உள்ளது. அதே சமயம் நல்ல மொழி ஒரு மோசமான அரசை உண்டாக்க வேண்டிய நிர்ப்பந்தமில்லை. மீண்டும் இது தெளிவான கன்பியூசிய தத்துவம்தான். ஆணைகள் தெளிவாக இல்லாவிட்டால் அவை நிறைவேற்றப்பட முடியாது. தொடர்பு சாதனங்கள் சீரழிகின்றன. நாம் அறிவைச் சார்ந்துநின்று செயல்படாமல் ஆழ்மனத்தின் மீது முழு வேலைப் பளுவையும் சுமத்தி அதையும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இதுதான் நம்மை சிரமப்படுத்துகிறது. ஒரு வியாபாரப் பெயரை இசையுடன் சேர்த்து சில தடவைகள் ஒலிபரப்புகிறார்கள்: பிறகு, வியாபாரப் பெயரின்றி இசையை மட்டும் மீண்டும் ஒலிபரப்பும் பொழுது அந்த இசை, வியாபாரப் பெயரைக் கொடுத்து விடுகிறது நமக்கு. நான் இந்தத் தாக்குதலைப் பற்றி சிந்திக்கிறேன். எண்ணத்தை மறைப்பதற்கும், உயிரோட்டமான, நேரடியான பதில்களைத் தராமல் விடுவதற்கும் மொழி பயன்படுத்தும்பொழுது நாம் அல்லல் படுகிறோம். தெளிவின்மைக்கும், தவறாக இட்டுச் செய்வதற்குமே பிரச்சார மொழியும், குற்ற ஆய்வியல் (Forensic) மொழியும் தெளிவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பே. கா: அறியாமையும், குற்றமின்மையும் எங்கு முடிவடைகின்றன? ஏய்ப்புத்தன்மை எங்கு ஆரம்பிக்கிறது.

பவுண்ட்: இயற்கையான அறியாமை என்றும் செயற்கையான அறியாமை என்றும் இருக்கின்றன. தற்போது செயற்கையான அறியாமை 85 சதவிகிதம் அளவிற்கு இருக்கிறது என்று நான் சொல்லவேண்டும்.

பே. கா: இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

பவுண்ட்: ஒவ்வொரு மனிதனின் கருத்துக்களும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில், ஒவ்வொன்றாகப் பரிசீலிக்கப்படும் உரிமை தனிமனிதனுக்கு இருக்க வேண்டும். இந்த உரிமை ஒன்றே மூளைச் சலவையை வெற்றி கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. இந்தத் தொகுதி வார்த்தைகள் இருக்கும் காலம் வரை, இருபத்து ஐந்து மனிதர்கள் உபயோகிக்கும் வரை, நமக்கு தெளிவு என்பதே கிடைக்காது. ஏதாவது அறிவு மிச்சம் வைக்கப்படுமானால் இதுதான் அறிவின் முதல் போராக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது மிகப் பிரதானமான கேள்விகள் என்று தோன்றியவைகளுக்கும் மனிதர்களிடமிருந்து நேர் பதில்களைப் பெற முடிந்ததில்லை.

நான் என் கேள்விகளைத் தொகுத்த விதத்தில் புரியாத தன்மையும், வன்முறையும் இதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம். பல சமயங்களில் நான் நினைக்கிறேன் இந்த புரியாத்தன்மை என்று சொல்லப்படுவது, மொழியின் புரியாத் தன்மையில் உள்ளது அல்ல. மாறாக எதிரில் இருக்கும் நபர் நீங்கள் ஏன் ஒரு விஷயத்தைக் கூறுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் போவதுதான்.

இந்த ஒரே சீராக்குதலுக்கான, எதிர்க்க முடியாதபடி பயங்கரமாக வீசும் எதிர்ப்புக்களிலிருந்தும், ஒரு குறிப்பிட்ட இடம் சார்ந்த மதிப்பீட்டினை நிலை நிறுத்த இன்னொரு போராட்டம் தேவைப்படுகிறது. இந்த முழுப் போரும் தனிமனித ஆன்மாவைப் பாதுகாப்பதற்கானது. வரலாற்றை அடக்கப்படுதலே நம் எதிரிச் செயல். நமக்கு எதிராக இருப்பவை குழம்ப வைக்கும் பிரச்சாரம், மூளைச் சலவை, சொகுசு மற்றும் வன்முறை. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கவிதை ஏழை மனிதனின் கலையாக இருந்தது. தான் விரும்பிய சிறந்ததை ஒரு மனிதன் தனிமைப்பட்ட தோட்டப் பண்ணையிலும் பெற முடிந்தது. அதன் பின் சினிமா மற்றும் இன்று தொலைக்காட்சி.

பே. கா: ஒவ்வொரு நினைவு கொள்ளும் உங்களின் அரசியல் செயலாக்கம் போரின் போது நீங்கள் இதாலியில் பேசிய ரேடியோ பேச்சுக்களே. நீங்கள் இந்தப் பேச்சுக்களை ஒலிபரப்பிய போது அமெரிக்க சட்டங்களை உடைப்பதான பிரக்ஞையுடன் இருந்தீர்களா?

பவுண்ட்: இல்லை. நான் முற்றிலும் ஆச்சரியம் அடைந்தேன். வாரத்தில் இரு முறை மைக்கில் பேசும் சுதந்திரத்திற்கான வாக்குறுதி எனக்கு அனுமதிக்கப் பட்டது: “ஒரு அமெரிக்கப் பிரஜை என்ற வகையில் அவரின் கடமைக்கு எதிராகவோ, அவரின் மனசாட்சிக்கு எதிராகவோ எதுவும் பேசும்படி கேட்டுக் கொள்ளப்படமாட்டார். இது அதைப் பற்றியும் கூறுகிறது என்று நினைக்கிறேன்.

பே. கா: தேசத்துரோகம் பற்றிய சட்டம் “உதவியும் பாதுகாப்பும் எதிரிக்குத் தருவது-பற்றிச் சொல்லவில்லையா? அந்நாடு (இதாலி) நாம் போரிடும் எதிரி நாடு இல்லையா?
பவுண்ட்: அரசியல் நிர்ணய உரிமைகளுக்காக நான் போரிட்டதாக நினைத்தேன். நான் ஒரு முழுப்பைத்தியக்காரனாக இருந்திருக்கலாம். ஆனால் நான் தேசத்துரோகம் செய்வதாக கண்டிப்பாக நினைக்கவில்லை.

P.G. வோடாவுஸ் ரேடியோவில் பேச முயன்றபோது ஆங்கிலேயர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள். எவரும் என்னைக் கூடாது என்று சொல்லவில்லை. ரேடியோவில் பேசிய நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது பற்றி போரின் வீழ்ச்சி வரை எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.

பல வருடங்களாகப் போரைத் தடுக்க உழைத்த பின் , இதாலியும் அமெரிக்காவும் போரிடும் மடமையைக் காண வேண்டியிருந்தது. கண்டிப்பாக நான் ராணுவத் துருப்புகளைப் புரட்சி செய்யும்படி சொல்லவில்லை. அரசியல் அமைப்போடு இசைவாகும் அரசாங்கம் பற்றிய உள்வயமான ஒரு பிரச்சனைக்காகப் போரிட்டதாக நான் நினைத்தேன். மேலும், எந்த மனிதனும், எந்தத் தனிமனிதனும், இனம், கொள்கை, நிறம் போன்ற காரணங்களால் என்னிடமிருந்து ஒரு மோசமான பங்கினை அடைந்ததாகச் சொல்ல முடியுமானால் அவன் வெளியில் வந்து விவரங்களுடன் சொல்லட்டும். The Guide to Kultur புத்தகம், க்வேக்கராக இருந்த Basil Bunting மற்றும் யூதராக இருந்த Louis Zukoussky க்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யர்கள் பெர்லினில் இருக்க வேண்டுமா கூடாதா என்பது பற்றி நீங்கள் நினைக்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. நான் ஏதாவது நல்லது செய்து கொண்டிருந்தேனா அல்லது துன்பங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. தனி மனித உரிமைகளின் பாதுகாப்பு பற்றி நான் தெளிவாக இருந்தேன். அதிகாரம் செலுத்துபவர்களோ அல்லது வேறுதுறையினரோ தங்களின் நேர்மையான அதிகாரங்களை மீறுகிறார்கள் என்கிறபோது எவரும் எதிர்ப்பதில்லை. இப்படிச் செய்தால் நாம் எல்லா சுதந்திரங்களையும் இழந்து விடுவோம். முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தில் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் என் வழிமுறை தவறாகப் போய்விட்டது. இதற்குக் குறிப்பாக இரண்டாம் உலகப் போருடன் எந்தவித சம்மந்தமும் கிடையாது.

ஒரு தனிமனிதனோ அல்லது மத எதிர்ப்பாளனோ ஏதாவது ஒரு அடிப்படை யதார்த்தத்தைக் கண்டு கொள்வானானால் அல்லது நடப்பிலிருக்கும் ஒரு அமைப்பில் ஏதாவது ஒரு தவறைக் கண்டுபிடிப்பானானால் அவன் அவனளவில் பல சில்லறைத் தவறுகளைச் செய்து, தன் கருத்தை நிலைநாட்டு முன்னர் சிதைந்து போகிறான்.
இருபது வருடங்களில் உலகம் ஹிஸ்டீரியாவை அதிகப்படுத்தியிருக்கிறது-மூன்றாம் உலகப் போர் பற்றிய நிலை, அதிகார வர்க்கத்தின் சர்வாதிகாரம் மற்றும் அச்சுப் படிவங்களில் இருந்து வரும் ஹிஸ்டீரியா. 1900த்தின் மாபெரும் சுதந்திர இழப்புக்கள் மறுக்க முடியாதவை. சர்வாதிகாரக் காரணிகளின் திறன் வேகம் கூடுவதை நாம் பார்த்திருக்கிறோம். இது மட்டுமே ஒரு மனிதனைக் கவலைப்பட வைக்கப் போதுமானது. கடன்களை உருவாக்கவே போர்கள் உருவாக்கப்படுகின்றன. விண்வெளி துணைக் கோள்கள் மற்றும் பிற வழிகளும் கூட கடன்களை உண்டாக்க முடியும் என்று நான் கருதிகிறேன்.

பே. கா: 1942இல் போர் தொடங்கியபோது நீங்கள் இதாலியை விட்டு அமெரிக்காவுக்குத் திரும்பிவிட முயன்றீர்கள். உங்கள் அமெரிக்கப் பயணம் மறுக்கப்பட்டதற்கான சந்தர்ப்பங்கள் என்னென்ன?

பவுண்ட்: அந்த சந்தர்ப்பங்கள் பற்றியவை செவிவழிச் செய்திகள். அக்கால கட்டம் பற்றிய நினைவுகள் எனக்குக் குழப்பமாய் இருக்கின்றன. மேலும் நான் நினைக்கிறேன் . . .லிஸ்பன் வரை போவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.--அங்கே போரின் முடிவுவரை முடக்கப்பட.

பே.கா: இதாலியில் போரின் போது அந்த வருடங்களில் நீங்கள் கவிதை எழுதினீர்களா? பிசான் கேண்டோக்கள் நீங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு எழுதப்பட்டவை. அந்த வருடங்களில்(போரின் போது) நீங்கள் என்ன எழுதினீர்கள்?

பவுண்ட்: விவாதங்கள், விவாதங்கள். நான் கன்பியூசிசை கொஞ்சம் மொழிபெயர்த்தேன்.
பே.கா: நீங்கள் சிறை முகாமில் வைக்கப்பட்ட பிறகு மீண்டும் கவிதை எழுத நேரிட்டது எவ்வாறு? நீங்கள் போரின் போது எந்தக் கேண்டோக்களையும் எழுதவில்லை இல்லையா?
பவுண்ட்: ஆடம்ஸ் தொடர்பானவை போர் முடிவதற்கு சற்று முன்பாக எழுதப்பட்டன. பிறகு Oro Lavoro பொருளாதாரக் கட்டுரைகளை இதாலிய மொழியில் எழுதிக் கொண்டிருந்தேன்.
பே.கா: சிறை முகாமில் வைக்கப்பட்ட காலத்திலிருந்து மூன்று தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள். சமீபத்தில் வந்தது Thrones. நீங்கள் கேண்டோக்களின் முடிவுக்கு அருகில் வந்திருக்க வேண்டும். மிச்சமிருக்கும் கேண்டோக்களில் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதைக் கூற முடியுமா?

பவுண்ட்: எழுத முடிவதற்கு இருப்பது ஒரு பேரழிவிற்கான மேலோட்டமான அறிகுறிகள் உள்ள போது ஒரு சொர்க்கத்தைப் பற்றி எழுதுவது கடினம். வெளிப்படையாக ஒரு நாகரீகத்திற்கோ அல்லது ஒரு Purgatarioவுக்கோ பாத்திரங்களைத் தேடுவது எளிமையானது. நான் மனித மனங்களின் உச்சமான சாதனைகளைச் சேகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கன்பியூசியசிற்குப் பதிலாக அகேஸிஸ்ஸை எல்லாவற்றுக்கும் உச்சத்தில் வைத்திருந்தால் நான் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கக்கூடும்.

பே.கா: நீங்கள் ஏறத்தாழ ஒரு இடத்தில் சிக்கிவிட்டீர்களா?

பவுண்ட்: ஆமாம். நான் சிக்கிவிட்டேன். பிரச்சனை என்னவென்றால் திருவாளர்கள் அ, ஆ, இ, விரும்பியது போல நான் செயலிழந்து போனேன். ஒரு வேளை நான் சீர்குலைந்து போவேனானால் இதைத்தான் நான் தற்காலிகமாகச் செய்ய வேண்டி இருக்கும். கண்டிப்பாக நான் குழப்பங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். விலக்கிப் புரிதலையும், தெளிவான கருத்தாக்கங்களையும் அளிக்க வேண்டும். காட்டுமிராண்டித்தனத்தின் வளர்ச்சியை எதிர்க்க சொற்கள் சார்ந்த ஒரு சூத்திரத்தை நான் கண்டுபிடிக்க வேண்டும்-ஒழுங்கின் தத்துவத்திற்கு எதிராகப் பிளந்த அணு.
காவியம் என்பது வரலாற்றை உள்ளடக்கிய கவிதை. நவீன சிந்தனை பல்வேறுபட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. குறைந்தபட்சம் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் அல்லது வாசகத்திரளுக்கும் இடையில் எல்லாம் அல்லது பலபதில்களை கற்பித்துக் கொள்ளப்பட்ட பொழுது, பழைய பெரும் காவியங்கள் வெற்றிபெற முடிந்தது. எனவே ஒரு சோதனைத் தலைமுறையில் இந்த முயற்சி சற்று வன்முறையானது. உங்களுக்கு அந்தக் கதை தெரியுமா:
“ஜானி என்ன படம் வரைகிறாய்?”
”கடவுள்”
“ஆனால் யாருக்கும் அவர் எப்படி இருப்பார் என்று தெரியாதேஙு”
“அவர்கள் தெரிந்து கொள்வார்கள் நான் முடித்தவுடன்”.
இந்த மாதிரியான தன்னம்பிக்கை மீண்டும் அடையக் கூடியதாய் இல்லை. காவியக் கருப்பொருள்கள் நிறைய இருக்கின்றன. தனிமனித உரிமைகளுக்கான போராட்டம் ஒரு காவியத்திற்கான பொருள். ஏதென்ஸ் நகரில் நடந்த விசாரணைகளிலிருந்து Anselmக்கும் William Rufusக்கும் இடையிலானது தாமஸ் பெக்கெட்டின் கொலை, மற்றும் ஜான் ஆடம் வரை.
ஐரோப்பாவும் அதன் நாகரீகமும் சீரழிந்து போய்க்கொண்டிருக்கின்றது என்ற கருத்தை எதிர்க்கும் பொருட்டு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு கருத்துருவத்திற்காக நான் சிலுவை ஏற்றப்படுவேனானால்-எதிலிருந்து என் குழப்பங்கள் சுற்றிக் குழுமத் தொடங்கினவோ அந்த ஒருமித்த கருத்துருவம்-ஐரோப்பிய கலாச்சாரம், அதன் மிகச்சிறந்த குணாம்சங்களுடன், மற்ற எல்லாக் கலாச்சாரங்களுடனும், என்னவிதமான மனிதகுல முழுமைக்கும் ஆகிய தன்மையுடனும் வாழ்விக்கப்பட வேண்டும் என்பது அந்தக் கருத்துருவமாக இருக்கக் கூடும். பயங்கரங்கரங்களைப் பற்றிய பிரச்சாரம் மற்றும் உல்லாசத்திற்கான பிரச்சாரம் இவற்றிற்கு எதிராக உங்களிடம் ஒரு எளிய அழகான பதில் உள்ளதா?

பே.கா: கேண்டோக்களின் தனித் தனிப் பிரிவுகள் இப்பொழுது கடைசி மூன்று பிரிவுகளும் தனித் தனி தலைப்புகளுடன் வெளிவந்துள்ளன-இதற்குப் பொருள் தனித் தனிப் பிரிவுகளில் குறிப்பிட்ட பிரச்சனைகளை ஆராய்கிறீர்கள் என்பதா?

பவுண்ட்: இல்லை. Rock Drillபிரிவு பிரதான செய்தியை வெளியிடுவதற்கு அவசியமாகிற எதிர்ப்பை Rock Drill உணர்த்தும் நோக்கம் கொண்டது. சம்மட்டியிடுதல்.
Divine Comedyயின் மூன்று பிரதானமான பிரிவுகளை பிசகாமல் நான் பின்பற்றவில்லை. தாந்தேதன்மையான பிரபஞ்சத்தை இன்று ஒரு சோதனைத் தலைமுறையில் பின்பற்ற முடியாது. உணர்ச்சிகளால் ஆளப்படும் மனிதர்கள் மேல்நோக்கிய பயணத்திற்கு யத்தனிக்கும் மனிதர்கள், ஒருவித தெய்வாம்சமான உள்பார்வையை சிறிது கொண்டிருக்கும் மனிதர்கள் ஆகிய இவர்களுக்கு இடையே என் பிரிவுகளை நான் அமைத்திருக்கிறேன். தாந்தேவின் சொர்க்கத்தில் வரும் சிம்மாசனங்கள் நல்ல அரசாங்கத்திற்குக் காரணமாக இருந்தவர்களின் ஆன்மாக்களுக்கானவை. என் கேண்டோக்களில் உள்ள அரியாசனங்கள் இந்த பூமியில் எந்த விதத்திலும் உருவாக்கம் செய்யக்கூடிய அல்லது நான் எனும் தன்மையிலிருந்து விலகி வெளியேறி சாத்தியமாகும் ஒரு ஒழுங்கின் வரையறையை ஸ்தாபிக்கும் முயற்சி இருக்கிறது. மானுட நடவடிக்கைகளில் செயல்படுவதாகத் தோன்றும் குறைந்த சதவீத அறிவின் காரணமாக தடை ஏற்படுகிறது. என் அரியாசனங்கள் தங்களின் செயல்பாடுகளுக்கு மேற்பட்டு ஏதோ ஒன்றுக்கு பொறுப்பாளிகளாகிற மனிதர்களின் மனோ நிலைகளைப் பற்றியதாகும்.

பே.கா: இப்பொழுது கேண்டோக்களின் முடிவுக்கு அருகில் நீங்கள் வந்துவிட்டதால் அவற்றை முடிந்தவுடன் திருத்தி எழுதும் திட்டங்கள் ஏதும் உண்டா?

பவுண்ட்: எனக்குத் தெரியாது. விரிவுபடுத்துவதற்கும் தெளிவுபடுத்துவதற்குமான ஒரு அவசியம் இருக்கிறது. ஆனால் ஒரு ஒருங்கிணைந்த சீரமைப்பு தயாராய் உள்ளதா என்று தெரியவில்லை. புரியாதபடி இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பேரடைஸோவில் மேலேற்றத்தின் ஒழுங்கு மிக அதிகமான தெளிவை நோக்கியதாக இருக்கும் என்று நம்புகிறேன். உள்நுழைந்துவிட்ட தவறுகளின் காரணமாக ஒரு திருத்தப்பட்ட பதிப்பு அவசியமாகிறது.

பே.கா: புனித எலிஸபெத் மருத்துவ விடுதியில் வாழ்ந்த அந்த எல்லா வருடங்களிலும் சமகால அமெரிக்கா பற்றிய உணர்வை உங்களைப் பார்க்க வந்தவர்கள் மூலம் பெற முடிந்ததா?

பவுண்ட்: பார்வையாளர்களைப் பற்றிய பிரச்சனை என்னவென்றால் தேவையான அளவு எதிர்த்தரப்பினரை நான் சந்திக்க முடியவில்லை. போதுமான அளவு தொடர்புகளைப் பெறமுடியாத, படிப்படியாகக் குவிந்த தனிமையால் நான் அவதிப்பட்டேன்-பதினைந்து வருடங்கள் மனிதர்களுடன் என்பதை விட கருத்துருவங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
பே.கா: நீங்கள் இதாலிக்குத் திரும்பியது ஒரு ஏமாற்றமாகத்தான் ஆகிவிட்டதா?

பவுண்ட்: சந்தேகமில்லாமல் ஐரோப்பா ஒரு அதிர்ச்சி. ஏதோ ஒன்றின் மையத்தில் ஒருவர் இனிமேல் இல்லாததால் ஒரு உணர்வின் அதிர்ச்சி அதன் பகுதியாக இருக்கக்கூடும். அதன் பிறகு புரிந்து கொள்ளப்படாமல் போதல், ஒரு அமெரிக்கன் என்கிற முறையில் புரிந்து கொள்ளப்படும் என்ற நம்பிக்கையின்மையால் என்னால் சொல்ல முடியாத பலவேறு விஷயங்கள் உள்ளன. யாரோ கூறினார்கள் ஐரோப்பாவின் அவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைசி அமெரிக்கன் நான்தாதென்று.
----------
பவுண்டின் உடல்நலம் இந்த பேட்டியின் பிழை திருத்தங்களைச் செய்ய முடியாமல் ஆக்கிவிட்டது. பேட்டி முழுமையானது. ஆனால் மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பங்கள் அமைந்திருந்தால் பவுண்ட் மாற்றியிருக்கக் கூடும் என்கிற குறிப்புகளையும் கொண்டிருக்கலாம்.
------------
Original Text of the interview was published in Writers at Work(2nd Series)edited by George Plimpton and introduced by Van Wyck Brooks. pp.7-59 ,Penguin Books(1979)

Friday, January 23, 2009

ழீன் ஜெனே-அறிமுகம் பிரம்மராஜன்



ழீன் ஜெனே

“ No doubt it is one of the functions of art to replace religious faith by the effective ingredient of beauty. At least beauty must have the power of a poem, that is to say of a crime....’’

-Jean Genet, Letter to Pauvert
நவீன பிரெஞ்சு இலக்கியத்தில் விளிம்புநிலையில் வாழ்ந்து அந்த வாழ்க்கையை சமரசமின்றி கலையாக மாற்றியவர்களில் ஜெனேவுக்கு இணையாக வேறு எவரையும் சொல்ல முடியாது. அவரது சமகாலக் கலைஞர்களின் முன்னணியில் இருந்தவர். எனினும் நவீன காலத்து தீவினையின் கவிஞனாக (Poet of Evil)ஜெனே மாத்திரமே இருக்க முடியும். 1910ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் ஒரு வேசியின் மகனாகப் பிறந்தவர் ஜெனே. தன் குழந்தைப்பிராயத்தை அனாதைகளுக்கான அரசின் இல்லத்தில் கழித்த ஜெனே பத்தாவது வயதில் திருட்டுக் குற்றத்திற்காக சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பட்டார். அவரது கல்வி எனச் சொல்லக்கூடியது இத்தகையது தான். ஐரோப்பிய தலைமறைவு வாழ்க்கையில் முப்பது ஆண்டுகளைக் கழித்து சமூகத்தின் மிகச் சீரழிந்த மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொண்டார். இதுவே அவரின் வாழ்க்கை முறையுமாயிற்று. அநேகமாய் அவர் சென்ற எல்லா நாடுகளிலும் ஜெனேவுக்கு தவறாமல் கிடைத்தது சிறை வாழ்க்கை. நாடுகளின் எல்லைகளைக் கடந்து செல்லுதல், சிறைகளுக்குள் மாட்டிக்கொள்ளுதல் போன்ற நிஜவாழ்க்கைச் சாகசங்கள் ஜெனேயின் யதார்த்த வாழ்வனுபவத்தைத் துண்டித்து அவரை Fancy க்கு இட்டுச் செல்லக் காரண மாயிருந்தன. செக்கஸ்லோவாகியாவையும் போலந்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதியைக் கடந்து செல்லும் அனுபவத்தை மிக அற்புதக் கவிதையாக்கி இருக்கிறார் ஜெனே. (The Thief’s Journal. 37-38 )
நவீன பிரெஞ்சு இலக்கியத்தில் குறிப்பாக நாவல், நாடகம் ஆகிய துறைகளில் தனக்கானதொரு இடத்தை ஸ்தாபித்துக் கொள்ள முடிந்திருக்கிறது ஜெனேவால். 1942ஆம் ஆண்டு எங்ள்ய்ங்ள் சிறைச்சாலையில் இருந்த போது, காகிதப்பைகள் தயாரிப்பதற்காகத் கைதிகளுக்குத் தரப்பட்ட ப்ரௌன் நிற தாள்களில் அவரது முதல் நாவலான Our lady of the flowers ஐ எழுதி முடித்தார்.
நாவலின் பிரதான அம்சங்களாக இருப்பவை கொலைக்குற்றங்கள், காட்டிக் கொடுத்தல், மற்றும் ஒருபால் புணர்ச்சி (Homo Sexuality) . பெண் தரகர்கள், திருடர்கள், வேசிப் பெண்கள், ஆண்வேசிகள், ஏமாற்றுக்காரர்கள் நிறைந்தது இந்நாவல். இதில் சித்தரிக்கப்படும் உலகில் ‘‘நடத்தை” என்ற பொது அர்த்தம் உள்ள சொல்லுக்கு அர்த்தமில்லாமல் போகிறது. வெளிப்பார்வைக்கு ஒழுங்கமைக்கப்பட்டது போலத் தொன்றும் ஒரு சமூகத்திற்கு வெளியேற்றப்பட்ட கீழ்மையின் மனிதர்களை அறிமுகம் செய்கிறார் ஜெனே. மானுடநிலையின் மிகக் கீழ்மையைப் பற்றிய புரிந்து கொண்டு அதைக் கலையாக வெளிப்பாடு செய்யும் மேதமை ஜெனேவிடம் காணப்படுகிறது. வெளியீட்டகம் சாராமல் தனிப்பட்ட முறையில் இந்நூல் Marc Barezatஎன்பவரால் 1943 ஆம் ஆண்டு அச்சாக்கம் செய்யப்பட்டது. மேலும் 1960கள் வரை இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் ஜெனேயின் நாவல்கள் தடை செய்யப்பட் டிருந்தன.
1952ஆம் ஆண்டு சார்த்தர் ஜெனேவின் வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஆழ்ந்து விமர்சித்து எக்ஸிஸ் டென்ஷியலிஸ்ட் என்ற உயர்ந்த ஸ்தானத்தை ஜெனேவுக்கு அளித்தார். எக்ஸிஸ்டென்ஷியலிஸக் கலகக்காரனான ஜெனே, முழுமுற்றான தீவினையை (Absolute Evil) அடையும் நோக்கத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாவிட்டாலும் அதைத் தன் கலையின் வாயிலாகச் சாதித்துக் கொண்டான் என்று அறிவித்தார்.
Saint Genet என்ற நூலில் சார்த்தர், Teresa of Avila வுக்கும், இடையிலான ஒப்புமையை ஆராய்கிறார். நிறைய மதாவாதிகளுக்கு சார்த்தரின் ஒப்புமை மிக அநியாயமாகத் தோன்றியிருக்கும். சார்த்தர் இந்த விஷயத்தில் எடுத்த முடிவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. புனிதத்துவம் என்பது மானுட இருப்பு நிலையின் பாவத்தன்மையை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பண்பட்ட மனநிலை (humility)ஆகுமெனின், முழுமையின் முன்னர் சகலவிதமான அகங்காரங்களும் அழிக்கப்படும் செயலாகுமெனின் புனிதத்துவத்திற்கான ஜெனேயின் தகுதி இன்னும் சிறப்பானது.
தன்பாலுணர்வு சார்ந்த Fantasy களை புதினங்களாக மாற்றும் பொழுதும், தன் பகற்கனவுகளை அவற்றுக்கே உரித்தான லயம், நிறம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உள்ளார்ந்த தேவை ஆகியவற்றுடன் எழுதப்பட்ட வாக்கியங்களாக மாற்றும் பொழுதும் ஜெனே தனது கனவுலகினைக் கட்டுப்படுத்தும் திறனைப் புரிந்து கொண்டார். ஜெனேவின் நூல்களின் பொதுத்தன்மையை சார்த்தர் பின்வருமாறு கூறுகிறார்:
‘‘தன் தீவினையால் நம்மைப் பீடிக்க வைக்கும் ஜெனே அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்கிறான். அவனின் ஒவ்வொரு நூலும் பீடிப்பின் உணர்ச்சி வடிகாலின் உச்சம், ஒரு மனோவியல் நாடகம். எங்ஙனம் அவனுடைய புதிய காதல்கள் அவனின் முந்திய காதல்களைச் சொல்லுகின்றன வோ அது போல ஒவ்வொரு நூலும் வெறுமனே அதற்கு முந்திய நூலை பிரதி எடுப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் ஒவ்வொரு நூலிலும் பீடிப்புக்கு ஆளாகிய இந்த மனிதன் இன்னும் சற்றுக் கூடுதலாய், தன்னைப் பிடித்திருக்கும் துர்தேவனுக்கு எஜமானன் ஆகிவிடுகிறான். இலக்கியத்தின் பத்து வருடங்கள் மனோவியல் பகுப்பாய்வு முறை வைத்தியத்திற்கு இணையாகும்.”
(Jean Paul Sartre-Saint Genet )
ஜெனேயின் விவரணை பாலுணர்ச்சி சார்ந்தும், பொருக்குகள் நிறைந்தும், மனிதக் கழிவுகளை ஆய்வது போலவும் தோன்றிய போதிலும் மிகக் கவித்துவமாக இருக்கிறது. தலைகீழாக்கப்பட்ட முறைமாறிய மதவியல் சூழல்களைக் கொண்ட உலகினையும் அதன் அனுபவங் களையும் சித்தரிக்கப் போதுமானதாகிறது ஜெனேயின் உரைநடை. கீழ்மையைத் தேடுவதிலும், அடைவதிலும் ஜெனேவின் தேடலும் புனிதமானதாய் மாறுகிறது.
ஜெர்மானியர்களால் ஃபிரான்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலத்தில் சிறைகளுக்குள் போவதும் வெளியில் வருவதுமாக இருந்தார் ஜெனே. சிறைதான் ஜெனேவைக் கவிஞனாக்கியது. ஒரு சமயம் ரிமாண்டில் இருக்கும் போதே தவறுதலாக சிறையில் அணியும் உடைகள் தரப்பட்டு, இன்னும் தண்டனையளிக்கப்படாத மற்ற குற்றவாளிகளுடன் தள்ளப்படுகிறார் ஜெனே. ஆனால் மற்றவர்கள் எல்லோருமே தாம் தினசரி அணியும் உடைகளை அணிந்திருக்கின்றனர். இவ்வாறு பரிகாசத்திற்கும், காழ்ப்புக்கும் உட்படுத்தப்படுகிறார் ஜெனே. இந்தக் கைதிகளில் ஒருவன் தன் தங்கைக்கு கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தான். அக்கவிதைகள் முட்டாள்தனமாக வும், தன்னிரக்கம் கொண்டவையாகவும் இருந்தபோதிலும் பாராட்டப்பட்டன. ஜெனே, அந்தக் கைதியின் அளவுக்கே கவிதை எழுத முடிமென்று நிரூபித்தார். நண்பனைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனையளிக்கப்பட்ட Maurice Pilorgeஎன்பவன் மீதான ஜெனேயின் நீண்ட கவிதை- இறங்கற்கபாடல் (1939)
கேவலமான குடிசைகள், சிறைகள், மலர்கள், ரயில் நிலையங்கள் எல்லைப்பகுதிகள், அபின், மாலுமிகள், துறைமுகங்கள், பொதுக்கழிப்பறைகள், சமஊர்வலங்கள், சேரிகளில் தங்குமிடங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, ஜெனே ஒருவித மேலோட்டமான காட்சித்தன்மையைக் கவிதை என மயங்கும்படி செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.
‘‘தமது உடல்களைத் தவிர எந்தவித அழகும் அற்ற
ஒதுக்கப்பட்டவர்களை நான் காதலிக்கிறேன்”

என்பதுதான் ஜெனேயின் பதிலாக இருந்தது. இத்தகைய சமூக அகதிகளைப் பற்றி எழுதும்போது ஜெனே பயன்படுத்த வேண்டிய அலங்கரிப்புகள் மேற்குறிப்பிட்ட வகையில்தான் அமைய வேண்டிருக்கிறது.
1940க்கும் 1948க்கும் இடைப்பட்ட காலங்களில் ஜெனே எழுதிய Miracle of the Rose, Querelle of Brest, Funeral Rites, Our Lady of the Flowers ஆகிய நான்கு உரைநடைப் படைப்புகளை மார்ட்டின் எஸ்லின் நீண்ட வசன கவிதைகள் என்று அழைக்கலாம் என்கிறார். இக்கவிதைகளின் உலகம் ஹேமோசெக்ஸூவல் அகதிகளால் நிறைந்தது. எனினும் இவைகளை முழுமையான அளவில் நாவல் என்று கூறமுடியாது. ஜெனேவின் கூற்றுப்படியே அவருடைய எந்த ஒரு பாத்திரமும் தன் சொந்த முடிவினைத் தீர்மானிப்பதில்லை. வேறுவகையில் சொல்வதனால், இப்பாத்திரங்களின் ஆசிரியனின் இஷ்டப்படி நடவடிக்கை மேற்கொள்கிற வெளிப்பாடுகளே அவை. மிகச் சரியான வரையறுப்புக்குச் சொல்வேமானால் சிறைவாசி ஒருவனின் பாலுணர்வு சார்ந்த Fantasy களேயாகும். இந்த சிறைவாசி, சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தனிமையில் தன் பகல் கனவுகளில் மூழ்கிப் போகிறான். சமூகம் எத்தகைய அமைவை (Pattern) இவன் மீது சுமத்தி, அதற்கு ஏற்றார்போல் வாழக் கட்டாயப்படுத்துகிறதோ, அவ்வமைப்பிற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவன். எனவேதான் இந்த நூல்களில் மிகச்சீரழிந்த பேசுப் பொருளும்,கவித்துவ அழகும் வினோதமான வகையில் பிணைந்து காணப்படுகின்றன.
ஜெனேவின் நாடங்களின் உலகம் படிநிலை அமைப்பு குற்றத்திற்காக மரணதண்டனை அளிக்கப்பட்ட Maurice Pilorge என்பவன் மீதான நீண்ட இரங்கற்பாடலை 1939ஆம் ஆண்டு எழுதினார்.
II
ஜெனேவின் நாடகங்களின் உலகம் படிநிலை அமைப்பு சார்ந்தும், சடங்குகள் நிறைந்தும் இருக்கிறது. இந்த உலகம் எதிர்மாறாக்கப்பட்ட ‘‘சாதாரண” மதிப்பீடுகள் மற்றும் சடங்கு முறைகளின் மீது பெருமளவு சார்ந்துள்ளது. இந்த எதிர்மாறாக்கப்பட்ட மதிப்பீடுகள் ஜெனேயின் எல்லா நாடங்களுக்கும் மையமான விஷயம். சாவு ஒன்றினையும், பலியாள் ஒருவரையும் சம்மந்தப்படுத்தும் இந்த நாடகங்கள் ‘‘தீவினை”யின் வெற்றியைக் கொண்டாடுகின்றன. இந்தத் தீவினை, பூர்ஷ்வா சமூகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் மதிப்பீடுகளுக்கு மறுதலையானது. ஆட்கொள்ளும் நினைவுகள், பொய்மையான கற்பனைகள், மற்றும் தன்னிச்சையான மூலாதர விடாய்கள் ஆகியவற்றுடன், யதார்த்த உலகினை சவாலுக்கு இழுத்தபடி தம் சுய அடையாளத்தைத் தேடித்திரியும் கதாபாத்திரங்கள் இவ்வுலகில் நிறைந்துள்ளனர்.
ஜெனேவைப் பொறுத்தவரையில் நாடகங்கள் என்பவை யதார்த்த நிகழ்ச்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதற்கல்ல. அவை பகற்கனவுகள். சிறைவாசி ஒருவனின் fantasy களை வாழ்க்கைப் போலாக்கும் ஒரு முறைமை. இதே காரணத்திற்காக ஜெனேவின் நாடகங்கள் நேரடித்தன்மை மிக்க நேச்சுரலிஸத்தை நிராகரிக்கின்றன. சற்றே தூக்கலான, வகைமைப்படுத்தப்பட்ட சிறைக்காவியங்களாகவும் இவற்றைப் பார்க்கலாம்.
Death Watchஜெனேவின் முதல் ஓரங்க நாடகம். இதை ஓரளவு அவரின் உரைநடை எழுத்துக்களின் நீட்சி எனக்கூற முடியும். இந்த நாடகத்தின் களமும் ஒரு சிறைதான். நான்கு குற்றவாளிகளைப் பற்றியது. மூன்று முக்கியப் பாத்திரங்களே நாடகத்தில் வருகிறார்கள். இவர்களால் வழிபடப்படும் இன்னொருவன் வெறுமனே உரையாடல்கள் மூலம் உயிர் பெருகிறான். 1949 ல் முதல் முதலாக Death Watch பாரிஸ் நகரில் மேடை யேற்றப்பட்டது. சிறிய, ஆனால் சக்தி வாய்ந்த இந்த நாடகம் ஜெனேவின் பிற்காலத்திய நாடகங்களுக்கான ஒரு சிறந்த முகவுரையாக அமைகிறது.
சிறைவாசிகளின் குறுகலான எல்லைகளில் இருந்து விடுதலையடைந்தது The Maids என்ற நாடகம். The Maidsல் முதலில் தோன்றும் வேலைக்காரியும், எஜமானியும் நிஜத்தில் வேலைக்காரிகளே என்பதை நாம் பிறகு தான் கண்டு கொள்கிறோம். நிஜமான எஜமானி வெளியில் சென்றவுடன் வேலைக்காரிகள் நாடகம் நடிக்கின்றனர். எஜமானியின் திமிர்த்தனமும், வேலைக்காரியின் அடிமைத்தனமும் இரு வேலைக்காரப் பெண்களால் நடிக்கப்படுகின்றன. சகோதரிகள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் எஜமானியாகின்றனர். Claire என்ற பாத்திரமும், Solange என்ற பாத்திரமும் இந்த அடிமை விளையாட்டையும், இறுதியிலான ஒரு கலகத்தையும் கற்பனையாய் நடித்துப் பார்க்கின்றனர். அழகான, தங்களைவிட இளமையான எஜமானியின் மீதான காதல் வெறுப்பு உறவுகளும் நாடகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றன. அன்பு, அதீத வெறுப்பு, பாலுணர்வு சார்ந்த காதல் எல்லாமே சேர்ந்து இறுதியில் Claire இன் இறப்பில் முடிகிறது. எஜமானியின் வேடத்தில் நடித்தபடி, நிஜ எஜமானிக்குத் தயாரித்து வைத்திருந்த விஷத்தை அருந்தி இறந்து போகிறாள் Claire.
பாரிஸில் 1947 ஆம் ஆண்டு முன்னணி நடிகராயிருந்த Louis Jouvet இயக்குநராகப் பங்கேற்று The Maids நாடகத்தை மேடையேற்றினார். இந்த மேடையேற்றத்திற்குப் பிறகே ஜெனேவுக்கு ‘‘மரியாதைக்குரிய” உலகின் அறிந்தேற்பு கிடைத்தது. ஆனால் 1948 ஆம் ஆண்டு ஜெனேவுக்கு ஆயுள் தண்டனை நிச்சயம் கொடுக்கப்படலாம் என்ற நிலைமை இருந்தது. பிரதான இலக்கியவாதிகளான சார்த்தர், Jean Cocteau, பாப்லோ பிக்காஸோ போன்ற கலைஞர்கள் பிரான்ஸின் ஜனாதிபதிக்கு கையொப்பமிட்ட மனுக்களை அனுப்பினர். இதற்கு பிறகு ஜெனேவின் வாழ்க்கையில் சற்றே முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. ஃபிரான்ஸின் முன்னணிப் பதிப்பாளர் ஒருவர் ஜெனேயின் எழுத்துக்களை சிறந்த பதிப்பாக வெளியிட்டார். முதல் தொகுதி 1951 இல் வெளிவந்தது.
பொதுவாகவே ஜெனேவுக்கு நாடக உலகின் மீதும், நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் இருந்த வெறுப்பு The Balconyஎன்ற நாடகம் இங்கிலாந்தில் மேடையேற்றப்பட்ட பொழுது கலகபூர்வமாய்த் தெரியவந்தது. The Balconyமுதல் முறையாக 1957 ஆம் ஆண்டு லண்டனின் Arts Theatre Club இல் அதன் அங்கத்தினர்களுக்காக பிரத்யேகமாக மேடையேற்றப்பட்டது. Pater Zadek என்ற இளம் ஆங்கில இயக்குநர் இந்த முயற்சியை மேற்கொண்டார். ஆனால் நாடகம் நடைபெறும் பொழுதே அது நடத்தப்பட்ட விதம் குறித்து கலகம் செய்ததற்காக ஜெனே வெளியேற்றப் பட்டார். ஜெனே வாதிட்டார்: ‘‘என் நாடகம் உன்னதப் பரிமாணங்கள் கொண்ட ஒரு விபச்சார விடுதியில் அமைக்கப்பட்டிருந்தது. ‘‘பீட்டர் ஸாடெக் கேவலமான பரிமாணம் கொண்ட ஒரு விபச்சார விடுதியை மேடையில் நிறுத்தியிருக்கிறார்”. சில நாட்கள் கழித்து, லண்டனில் இருந்து வெளியான New Statesman பத்திரிகையில் (4 மே 1957) சிறந்த விவாதம் ஒன்றை முன் வைத்ததோடு மட்டுமின்றி Pater Zadek,, ஜெனேவின் மிகச் சரியான கனவாக இருந்த The Balconyநாடகத்தை நடிப்பின் வெளிப்பாடாய் மாற்றிய செயல்பாட்டில் சமரசம் நடந்துவிட்டது. இதை ஜெனேவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை என்றார் Pater Zadek.. மேலும் மிக அழகிய திருஆலயத்தில் நடத்தப்பெறும் கூட்டுப் பிரார்த்தனையின் சிறப்பமைதியுடன் தன் நாடகம் நடத்தப்பட் டிருக்கவேண்டும் என்று ஜெனே அபிப்ராயப்பட்டார்.
பொய்மைகளின் மாளிகையான இர்மாவின் விபச்சார விடுதிக்கு வருகை தரும் மனிதர்கள் தங்களின் மிக அத்யந்த, ரகசிய பகல்கனவுகளில் திளைக்கலாம். ஒருவர் நீதிபதியாக மாறி தன்முன் நிற்கும் பெண் குற்றவாளிக்கு தண்டனை வழங்கலாம். தொழுநோயாளி ஒருவனை கன்னிமேரி நேரில் தோன்றி அற்புத குணமளிக்கலாம். இதற்கான உடைகளை, ஒப்பனைகளை விடுதியின் தலைவி இர்மா வைத்திருக்கிறாள். The Maids நாடகத்தைப் போலவே The Balconyயும் நாடகத்திற்குள் ஒரு நாடகம். The Balconyயின் சிறப்பு என்னவென்றால் அது ஃபான்டஸியின் உலகைப் பற்றிய ஒரு ஃபான்டஸியின் உலகம். கீழ்ப்படிதலுக்கும் மேலாதிக்கம் செலுத்துவதற்குமான பிரத்யேக் கருவியாக செக்ஸ் இயங்குவதை ஜெனே இதில் சித்தரிக்கிறார்.
1957இல் ஜெனே எழுதிய The Blacks நாடகத்தை 1959ஆம் ஆண்டு தர்ஞ்ங்ழ் இப்ண்ய் என்ற இயக்குநர் மேடையேற்றினார். இதில் பங்கு பெற்ற எல்லா நடிகர்களும் நீக்ரோக்கள் என்ற செய்தி கவனத்திற்குரியது. நிறைய பார்வையாளர்களை இந்த நாடகம் குழப்பிய போதிலும், விமர்சகர்களால் புரிந்து கொள்ள இயலாமல் போனாலும், சிறந்த முறையில் நடிக்கப்பட்டு பல மாதங்கள் வெற்றிகரமாய் நடந்தது. இதில் நீக்ரோக்கள், சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட அனைத்து சாராருக்குமான படிமமாக இருக்கின்றனர். மற்ற நாடகப்பாத்திரங்களைப் போலவே இவர்களிலும் தண்டனைக் குற்றவாளிகள், சிறைவாசிகள் ஆகியோரைப் பார்க்க முடியும். குற்ற உணர்வையும், பழி தீர்த்தலையும் குறித்த கனவுகளைப் பற்றிய கனவுகளை இவர்கள் காண்பவர்களாகின்றனர். Village மற்றும் virtue ஆகிய இரு பாத்திரங்கள் மாத்திரமே ஜெனேவின் இருண்ட நாடக உலகில் தனித் தன்மை கொண்டவர்கள். தம் விஷச் சூழலில் இருந்து தப்பித்து வெளியேறி, பகற்கனவுகளைத் தாண்டி, உண்மையான மானிட உறவுகளைக் காதல் மூலமாக சிருஷ்டிக்கின்றனர். கவித்துவம் மிகுந்த மொழியை The Blacksநாடகத்தில் ஜெனே கையாள்கிறார்.
1961 ஆம் ஆண்டு உருவான The Screens, அல்ஜீரியப் போர் மீதான ஜெனெவின் கடும் விமர்சனமாக அமைகிறது. இந்த நாடகத்தில் சில அம்சங்களைப் பார்த்தபின் ஜெனே அபத்த நாடக அரங்கினை விட்டு விட்டு அரசியல் யதார்த்த நாடகத்திற்கு மாறி விட்டாரோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு. The Blacksஇல் சொல்லப்பட்ட விஷயங்களுக்கும், The Screens நாடகத்தில் விவாதத்திற்கு உள்ளாகும் விஷயங்களுக்கும் சில பொதுத்தன்மைகள் காணப்படுகின்றன. நான்கு அடுக்குகளில் அமைந்த திறந்தவெளி அரங்கில் The Screens நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் இடம் பெறும் இந்த நாடகத்தை நிர்வாகம் செய்வது சுலபமாக இருக்கவில்லை. 1964 இல் Screens நாடகத்திற்காக தயார்ப்படுத்த வேண்டுமென்ற பிரதான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட Peter Brook இன் Theature of Cruelty, ஜெனேவின் நாடகத்தில் முதல் 12 காட்சிகளை மட்டுமே நிகழ்த்த முடிந்தது.
பொதுவாகச் சொல்வதானால் ஜெனேவின் எதிர்ப்புகளும், கலகமும் சடங்கியல்பானவை. இந்த சடங்கு என்பது இச்சை பூர்த்திக்கானது (Wish-fulfilment). எனவே மனோவியல் உண்மைகளைக் கொண்டதாக இருக்கின்றன. ஜெனேவின் படைப்புகள், நாடகத்திற்கு எழுத வந்த போது தன் நாவல்களில் விஷச் சூழல்கள் போலச் சுற்றிச் சூழ்ந்த பகற்கனவுகளில் இருந்து அவரால் வெளிவர முடிந்தது. இவை சமூகத்தினால் சிக்கி வைக்கப்பட்ட தனிமனிதர்களைப் பற்றிப் பேசுகின்றன. இவர்கள் தமக்கான அர்த்தங்களை சடங்குகள் மற்றும் புராணிகம் வழியாகக் கண்டுபிடிக்க முயன்று தோல்வியடைகின்றனர் The Balconyயில் வரும் புரட்சிக்காரர்களைப் போலவே.
ஜெனேயின் அரசியல் முக்கியத்துவத்தை Philp Thodyமட்டுமே சுட்டிகாட்டியிருக்கிறார். இறுதி இரண்டு நாடகங்களும் இனப் பிரச்னையையும், பிரான்சுக்கு எதிரான அல்ஜீரியாவின் துன்பப் போராட்டங்களையும் காட்டுகின்றன. அரசியல் ரீதியான பார்வையிலும் தோல்விக் கண்ணோட்டமே ஜெனேவுக்கு இருந்தாலும் ஒரு சமுதாயம் எங்ஙனம் தன்னை உருவாக்கிக் கொள்கிறது என்பதை நம்மால் கவனிக்க முடியும். மனித அனுபவங்களின் முக்கியத்துவத்தையும் ஜெனே மறுப்பதில்லை. மாறாக அவற்றுக்குப் புதிய பரிமாணங்களில் அர்த்தங்களைத் தரத் தேடுகிறார். ஆசாரமற்ற உலகு யதேச்சையானது. அர்த்தம் விளங்க சாத்தியம் தராத உலகம் ஆழம் காண முடியாததாய் இருக்கிறது.ஆனால் இவ்விரு உலகங்களும் இணையும் இடம் கவிதை பிறக்குமிடம். ஜெனேவின் ஒரு போக்கு வெளிப்புறத்திலிருந்த தினசரி வாழ்வினைப் பார்க்கிறது. இன்னொரு போக்கு முழுமையான பொய்த் தோற்றத்தை சிருஷ்டிக்க யத்தனிக்கிறது. இவ்விரு போக்குகளின் மோதலில் அனாசார உலகின் (Profane) தொடர்பு அறுந்து போய்விடுகிறது.
ஆரம்ப நாடகங்கள் இரண்டும் அவற்றின் கச்சிதத் தன்மை மூலம் சார்த்தரின் Huis clos ஐ நினைவூட்டுகின்றன. பின் கட்ட நாடகங்கள் உத்திமுறை காரணமாகவும், திறந்த வெளியை நோக்கிச் செல்வதாலும், Committedஆக இருப்பதாலும் பெர்டோல்ட் பிரெக்ட் தன்மையான காவியங்களைப் போலிருக்கின்றன. தன்னை மீறியே ஜெனே ஒரு Committed கவிஞராக இருக்கிறார். காரணம் ஜெனேவின் படைப்புச் செயலுக்கும், பார்வையாளர்களின் செயல்பாடுகளுக்கும் முரண்கள் இருக்கின்றன. ஜெனே தனது நாயகர்களை அவர்களின் சமூகப் பொருந்து சூழல்களில் இருந்து பிரித்து எடுத்து Negative heroகளாகக் காண்பித்தாலும், பார்வையாளர்கள், இந்த நாயகர்கள் எந்தச் சமூகச் சூழலில் இருந்து வந்தனரோ அங்கே அவர்களைப் பொருத்தி, Positive hero க்களாக விளக்கிக் கொள்கின்றனர். ஜெனேவின் இரட்டைநிலை இது தான்: சோஷலிஸ்ட் நாடக அரங்கினைச் சிருஷ்டிக்க மறுப்பதன் மூலம் negative revolt ஒன்றை உருவாக்குகிறார். இந்த negative revoltசமுக பூர்வமாகவே விளக்கம் பெற முடியும். இன்றைய பார்வையிலிருந்து பார்க்கும் போது கடைசி மூன்று நாடகங்களும் Antonin Artaud இன் Theatre of Cruelty பற்றிய கோட்பாடுகளை ஏற்று, ப்ரெக்டின் Theatre of Provocationஐ ஸ்வீகரித்துக் கொண்டு, கவனம் சிதைக்கும் Theatre of Hatred ஆக மாறுகின்றன.

Saturday, January 10, 2009

ஷோபா சக்தியின் கொரில்லா—சில குறிப்புகள்* பிரம்மராஜன்

ஷோபா சக்தியின் கொரில்லாசில குறிப்புகள்* பிரம்மராஜன்


மனித குல மேம்பாட்டுக்காகவும் இறுதியான மானுட விமோசனத்திற்காகவும் என நோக்கங் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் நேரடியானதும் மறைமுகமானதுமான செயல்பாடுகள் பெரும்பாலும் உரிய நோக்கங்களின் எதிர்த்திசையிலே நிகழ்ந்து வந்திருப்பதை சர்தேச வரலாறு நமக்குக் காட்டுகிறது. இயக்கங்களும் அமைப்புகளும் ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவ மேற்கொள்ளும் யத்தனங்களிலேயே எண்ணற்ற தனிநபர்களின் முகம், மனம், மற்றும் உடல் சிதைவுக்குள்ளாகிறது. இதை விமர்சனம் செய்யவோ, கேள்விக்குட்படுத்தவோ முயல்கிற எவரையுமே--அவர் இயக்கத்தின் சாதாரண அங்கத்தினராக இருந்தாலும் சரி, அமைப்பின் நிறுவன தலைமைக்கு மிக அருகாமைப் பதவி வகித்துக் கொண்டிருக்கும் இன்றியமையாத நிறுவனவாதியாக இருந்தாலும் சரி--அமைப்பு அவர்களைக் காவு கொடுக்கத் தயங்குவதில்லை. தவறியதில்லை. பிரெஞ்சுப் புரட்சியில் தொடங்கி, பாசிசம், இறுதியில் ஸ்டாலினிசம் வரையில் எந்த ஒரு கட்டத்திலும் மாற்றுப் பார்வையும் கருத்தையும் கொண்டவர்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாகக் கருதப்பட்டு சுத்தகரிப்பு மூலம் களை எடுக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். கருத்தியல் ரீதியான இன்னும் யதார்த்த சாத்தியமில்லாத, பொதுமைப்படுத்தப்பட்ட சமூக மனிதர்களின் பசுமையான எதிர்காலத்தை முன்னிட்டுத்தான் கூர்மை நிறைந்த பல தனிநபர்களை மானுடம் இழந்திருக்கிறது. இதில் இழக்கப்பட்ட தனிநபர்கள் அதுவரை குறிப்பிட்ட இயக்கங்களுக்கு செய்து வந்திருக்கும் ஊழியத்திற்கான பலனை, மதிப்பை, ஏற்பினை எதிர்கால சமூக மனிதன் அறிய முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். இயக்கமும் அமைப்பும் அவற்றின் இறுதி நிர்வாக யந்திரமான அரசும் கூட தனிநபர்களை ஒடுக்கி அழிக்கவே செய்யும். ஆகவேதான் அரசாங்கங்கள் இல்லாத நிலையை எய்துவதற்கு நமக்கு அருகதை இன்னும் சில நூற்றாண்டுகளிலாவது வரும் என Borges அவதானித்தார். இரண்டாம் தர யோக்யதை உள்ள அமைப்பாளர்கள் பலர் தீவிரத் ஊழியக்காரர்களை விட எளிதாகக் கட்சியின் மேல் அடுக்குகளை எட்டிப் பிடித்துவிடுவதை ஸோல்ஸெனிட்ஸின் கான்சர் வார்டு நாவலில் சித்தரித்தார்.
எல்லோருக்கும் பொதுவென்ற கட்டுப்பாடுகளையும் நடத்தை விதிகளையும் விதித்து தனிநபர் மீது அபரிமிதமான, எல்லையற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றன அமைப்புகள். நீண்ட கால இலக்குகளுக்காக இயக்கம் தனது அங்கத்தினர்களை தனித்தன்மையிழக்கச் செய்து முழுமுற்றாய்ச் சரண்புக வைக்கிறது. ஏறத்தாழ கடவுளிடம் முழுமுற்றாகச் சரணடைவதற்கு இது ஒப்பான தெனினும் கடவுள் சில நேரங்களில் காப்பாற்றுபவராக இருக்கிறார். ஆனால் இயக்கத்தலைமை கருணையின்றி சிரச்சேதம் செய்வதிலேயே முனைப்பு கொண்டிருக்கிறது.

இந்த நாவலின் குறிப்பிடத்தக்க முதலாம் அம்சமாக நான் காண்பது அதன் சமகால வாழ்க்கைப் பிரதிபலிப்பு. பிரமாதப்படுத்தக் கூடிய அம்சங்களில் இது ஒன்றா என்று சிலருக்கு கேள்வி எழக்கூடும். தமிழ்ச் சூழலில், குறிப்பாக தற்காலத் தமிழ் இலக்கியத்தில் புனை கதை சமகால வாழ்க்கையிலிருந்து பெரிதும் அகன்று அகழ்வாராய்ச்சிகளிலும், புதைந்த நகர வரலாறுகளிலும், மறைந்தொழிந்த நாகரிகங்களிலும் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் பரிதாப நிலை நிலவுகிறது. இதற்கான காரணங்களாக நேரடியான வாழ்வனுபவ வறட்சியையும் கண்மூடித்தனமாகப் புதிய மோஸ்தர்களைப் பாவித்தலையும் சொல்லலாம். இந்தச் சூழ்நிலையில் ஷோபா சக்தியின் கொரில்லா நாவலை படிப்பது புத்துணர்ச்சி தருவதாக இருக்கிறது. நாவலின் கதை விவரணை மொழி அதன் இயல்பான கொச்சைப் பிரயோகங்களினால் சிறிய தடங்கல்களையும் சந்தேகங்களையும் உண்டு பண்ணுகிறது. எனினும் இதை மிஞ்சி நாவல் சொல்ல வந்த செய்தியை கனகச்சிதமாகச் சொல்லி விடுகிறது. நாவலின் விவரணையில் பராக்குப் பார்த்தல் இல்லாமலிருப்பது எத்தனை ஆறுதலாகயிருக்கிறது. அநேகமாக இந்த நாவலை நான் படித்த இரண்டு தடவைகளிலும் இரண்டு அமர்வுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. தீவிர வாசிப்பு மனோநிலை கோருகிற கவனத்துடன் படித்தால் 4 மணி நேரத்திற்கு மேல் ஆவதில்லை. மூடி வைக்கத் தோன்றாமல் நான் வாசித்தேன்.

எல்லாம் அறிந்த (omniscient Narrator ) விவரணையளாரின் நோக்கில் கதை சொல்லப்படுகிறது. ஷோபா சக்தி சிறந்த கதைசொல்லியாக இருப்பது மட்டுமன்றி அவருக்குச் சொல்வதற்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. விவரணையாளர் உள்புகுந்து நடப்புகளை அறிய முடியாமலிருக்கும் கதைகளில் வாய்வழிக் கதைகளின் திரும்பச் சொல்லல் முறையைப் பின்பற்றுகிறார் நாவலாசிரியர். எல்லாப் பாத்திரங்களின் நினைவோட்டத்திலும் புகுந்து வெளிவரமுடியும் பலம் இந்த விவரணை உத்தியின் மூலம் கிடைக்கும். பாத்திரங்களுக்குத் தெரியாத உண்மைகளும், ரகசியங்களும் வாசகனுக்கு சில நேரங்களில் முன்கூட்டியே தெரிந்து விடும். நாவலில் இடம் பெறும் தொழில் நுட்பக் குறிப்புகள்--குறிப்பாக ராணுவத் தளவாடங்கள் பற்றியவை--நாவலாசிரியரின் செய்திச்சேகர விற்பன்னத்தன்மையைக் காட்டுவதில்லை. அப்படிச் செய்திகளைக் கொட்டிப் பரப்பி கண்காட்சி வைத்து வாசகனை திசை திருப்பும் வேலையை விட அதிகக் கூடுதலாக கதையின் நிகழ்ச்சிகளை நடத்திச் செல்லும் பொறுப்பு புதினம் எழுதுபவரைக் கட்டாயப்படுத்துகிறது. கொரில்லா என்ற வார்த்தைப் பிரயோகம் பற்றிய அகராதிக் குறிப்புகளும் கூட விலகலானவை என்று எவரும் சொல்லி விட இயலாது. முக்கியமாக நாவலின் தலைப்பு இயக்கக்காரர்களின் கெரில்லாத்தன்மையை சொல்வதில்லை. நாவலின் நாயகனான மூத்த ஏசுராசனின் (அவன் என்றே நாவல் முழுமைக்கும் விளிக்கப்படுகிறது) பட்டப் பெயர் மாத்திரமில்லாது அவனது மூர்க்கக் குணத்திற்கு மறுபெயராக நிற்கிறது. கதாபாத்திரங்களைச் சித்தரிப்பது என்பது ஏதோ கீழ்மையான படைப்புத் தொழில் என்று சமகால தமிழ்ப்புனைகதை யாளர்கள் எண்ணிக் கொண்டிருக்கையில் கொரில்லா நாவலின் பாத்திரப் படைப்பு வாசகனுக்கு நிறைவைத் தருவதாக இருக்கிறது.

புனைகதையின் விவரணைப் பூகோளத்தினை எடுத்துக் கொள்ளலாம். சிலர் தமிழில் இதை பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஏதோ ஒரு டூரிஸ்ட் கையேட்டில் இருப்பது போல எழுதுவது வழக்கமாக இருந்தது. இதுவும் ஒருவித பராக்குப் பார்க்கும் தன்மையைச் சேர்ந்ததுதான். ஷோபா சக்தி நாவலின் பூகோளத்தினை அவசியப்பட்ட இடங்களில் மாத்திரம் சிக்கனமாகச் சொல்லி விடுகிறார். குறைந்தபட்ச வரைபடத் தகவல் இன்றி நாவல் சொல்லும் விவரணையை பின்பற்றிச் செல்வது சிரமமாகி விடக் கூடும்.

நாவலின் தொடக்கம் சில சிறுகதைகளைக் கொண்டு அடுக்கப்பட்டது போலத் தோன்றினாலும் 40 பக்கங்களுக்கு மேற்பட்டு பிரதான கதையோட்டத்தையே வலியுறுத்துகிறது விவரணை. சிறு சிறு கதையோட்டங்கள் பிரதான கதையோட்டத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை உருவி எடுத்து விட முடியாது. நாவலின் வடிவமைப்பும் இறுக்கமாகக் கட்டப் பட்டிருக்கிறது. படிக்கும் பார்வையோட்டத்தினை ஆசுவாசப் படுத்தக் கூடிய, கொஞ்சம் வேதாகமப் புத்தகத்தை நினைவூட்டும்படியான புத்தக உள் அச்சமைப்பு. சில இடங்களில் சிங்கள மொழி வாக்கியப் பிரயோகங்களுக்கு நாவாலாசிரியர் சிரத்தை எடுத்து தமிழ் மொழிபெயர்ப்பு தந்திருக்கிறார். சில முக்கியமான இடங்களில், புரியப்பட வேண்டிய இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே வாக்கியம் தரப்பட்டிருப்பது வாசகனை சோதிக்கக் கூடும். சம்பிரதாய ஃபிளாஷ் பேக் உத்தியைக் கைக் கொள்கிறார் நாவலாசிரியர். இருப்பினும் பிரின்சி என்ற பெண் பாத்திரத்தைப் பொருத்தவரை, அவளின் முடிவு ஃபிளாஷ் ஃபார்வாடாகியிருக்கிறது. நாவலின் தொடக்கத்திலேயே இறந்து போய்விடுகிற பிரின்சி நாவலின் பிந்திய பகுதியில்தான் பூப்பருவம் எய்துவதாகவே வருகிறது.
மேலோட்டமாகப் படித்தால் நிஜத்தகவல்களை வைத்து எழுதப்பட்ட கறாரான யதார்த்த வகை நாவல் போன்று தோன்றுகிறது. ஆழ்ந்து படித்தால்தான் இது வெறும் யதார்த்த வகை நாவலில்லை என்பது புரியும். இதில் இடம் பெறும் பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையெல்லைகள் நிஜ வருடங்களில் அடிக்குறிப்புகளில் தரப்பட்டுள்ளன. அவற்றை வாசகன் சரிபார்த்துக் கொள்ளும் நோக்கமிருப்பின் பார்த்துக் கொள்ளலாம். எனினும் நாவலின் நோக்கம் அதுவாக இருக்காது. வாழ்வின் நிஜப் பாத்திரங்களை வைத்துக் கட்டப் பட்டிருப்பதாலேயோ என்னவோ அவை வாழ்வின் பாத்திரங்களை விட அசுர பரிமாணங்கள டைந்து நிற்கின்றன. இரவல் செய்திக் கத்தரிப்புகளை வைத்து இந்த நாவலை எழுதுவது சாத்தியமே இல்லை. மியூசியம்களைக் குடைந்தும், இன்டர்வியூக்கள் நடத்தியும் கொரில்லா மாதிரியான நாவலை எழுத முடியாது.
கொரில்லா நாவலின் நாயகன் மூத்த ஏசுராசன் என்று சொன்னோம். இருப்பினும் நாவலின் விவரணை நகர்வுக்கு காரணமாக இருப்பவர் ரொக்கிராசன் என்கிற யாகோப்பு அந்தோனிதாசன். இவரின் பள்ளிப் பருவத்தில் தொடங்கி, புலிப்டையில் ஒரு ரெக்ரூட்டாக ஆகி, பிறகு தன் சொந்த இடமான குஞ்சன் வயல் கிராமத்திற்கே புலிப்படையின் சென்ட்ரி பாய்ண்ட் காம்பில் துணைக் கம்மாண்டராக வருகிறார். ரொக்கிராஜனின் உயர்வு தாழ்வுகளை புலிப்படைக்கு உள்ளேயும் அதிலிருந்து விலக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நாவல் நமக்கு அளிக்கிறது. பெயர்கள் பற்றியஅப்செஷன் இந்த நாவலில் இருக்கிறது. புலிப்படையில் இயக்கப் பெயராக வேறு ஒரு பெயரை வைக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்ட ரொக்கிராஜூக்கு தனக்கு அராபத் என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அதற்கு முன்பாக ரொக்கிராஜூக்கு சஞ்சய் என்ற பெயர் வைக்கப்படுகிறது. எனினும் இறுதியில் கொரில்லாவின் மகனாகப் பிறந்த காரணத்தினால் ரொக்கிராஜூக்கும் காம்ப்பில் கொரில்லா என்ற பெயர் நிலைக்கிறது. கொரில்லா என்று கூப்பிடுவது பற்றி ஆட்சேபம் தெரிவிக்காதவர் ரொக்கிராஜின் தகப்பன் காட்டாற்ற ஏசுராஜன். ஆனால் கொரில்லா என்ற பெயரை ரொக்கி விரும்புவதில்லை. நாவல் இறுதியில் ரொக்கி புதின விவரணையாளரால் அந்தோனி என்றழைக்கப்படுகிறார். எத்தனைக்கெத்தனை ஜூனியர் கொரில்லாவான இவருடைய பெயர்கள் மாறுதலடைகின்ற னவோ அந்தளவு அவர் வாழ்க்கை நிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரொக்கியின் மதச் சார்பான தன்மை இயக்கத்திலிருந்து கழற்றிவிட்ட பிறகு ஒரு அகதியாகக் கூடுதலடைவது போல சித்திரிக்கப்பட்டிருந்தாலும் அவர் தொடக்கத்திலிருந்தே மதநம்பிக்கையுடையவராகத்தான் இருக்கிறார். பொய்க் குற்றச் சாட்டுக்களுக்காக இயக்கத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு சித்தரவதைக்குள்ளான பிறகு மதம் மீண்டும் ஒரு சரண்புகுமிடமாக ஆவதை கூர்ந்து படிப்பவர்கள் அறியலாம். ஏனெனில் புதினத்தின் விவரணையோட்டம் எந்த ஒரு தகவலையும் அழுத்தம் கொடுத்தோ குறைத்தோ சொல்வதில்லை. குமுதினி என்கிற படகில் வந்த 50ற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் சிங்களவர்களால் கொன்று சிதைக்கப்பட்டதைக் கூட அளவான தகவல்களுடன்தான் சொல்லியிருக்கிறார். மனதைப் பிழிய வைக்கிற ஒரு இடம் இது. ஆயினும் ஷோபா சக்தி இதை செண்டிமென்டல் சுரண்டலுக்காக இம்மாதிரி சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த முதிர்ச்சி பாராட்டப்பட வேண்டும். இதே போன்று சினிமாச் சூழ்நிலை அளவுக்கே மின்சாரமேற்றப்பட்டதாக இருக்கும் தகப்பன் கொரில்லாவை எதிரியாக எதிர் கொள்ளும் ரொக்கிராஜின் நிலைமையும் கூட பதட்டமின்றி கையாளப்பட்டிருக்கிறது.

பிரின்ஸி நிர்மலா ஏசுதாசன், மற்றும் சலங்கை, ஜெயசீலி, ஜெனோவா ஆகிய பெண் பாத்திரங்கள் கரிசனத்துடன் அணுகப்பட்டிருக்கிறார்கள். பெண் வெறுப்பு என்று குறிப்பிட்டு ஏதும் ரொக்கிக்கு இருப்பதாகச் சொல்லப்பட முடியாதெனினும் தங்கை பிரின்ஸியைத் தவிர பிறரை அசட்டையாகத்தான் நிருபிக்கிறார். அண்ணன் தங்கைக்கு இடையிலான ஒரு மென்மையான உறவினை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். இந்த இடத்தை செண்டிமென்டலாக்க நினைத்தால் ஒரு அத்தியாயம் எழுதியிருக்க முடியும். சலங்கை என்று அழைக்கப்படும் பாலினத் தொழிலாளியும் புரிதலுடன் படைக்கப்பட்டிருக்கிறார்.(இது போன்ற ஒரு பாலினத் தொழிலாளியை தேசத்துரோகி சிறுகதைத் தொகுதியில் பார்க்க முடியும்) ஜெயசீலிக்கு சற்றே அதிகமான இடங்களும் பக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஜெயசீலி வாழ்க்கையிலிருந்து காணாமல் போனது போலவே நாவலிலிருந்தும் மறைந்து போகிறார்.

பாரிசில் நடப்பதாக அமையும் நாவலின் இறுதி அத்தியாயங்களுக்கு வேண்டிய கவனக் குவிப்பினை என்னால் செய்ய முடியாது போயினும் நாவலின் மிக நவீனத் தன்மைக்கும் நாவலின் பிரதான விவாதப் பொருளுக்கும் காரணமானவை அவையே என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். குறிப்பாக வன்முறையிலிருந்து மீள்வதற்கு நாம் ஒரு மகாத்மாவுக்காக காத்திருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் அங்குதான் எழுப்பப்படுகிறது. சகலத்தையும் ஒருவர் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டம் வரும்போது மதம் அடைக்கலமாகத் தோன்றும். ஏன் ஜாதியும் இனமுமே கூட அப்படித் தோன்றக் கூடுமென்பதைப் பற்றிய விவாதப் புள்ளிகள் நாவலின் இந்தக் கடைசி அத்தியாயங்களில்தான் கிடைக்கின்றன. வன்முறையின் மீதிருந்த நாட்டம் போர் எதிர்ப்பாக மாறும். அப்போதுதான் ரொக்கிராஜன் என்கிற யாகோப்பு அந்தோனிதாசன் விலகல்வாதியாகக் கூட ஆகிவிடுகிறான்.
சமீபத்தில் வந்த மிக முக்கியமான தமிழ் நாவலாக மட்டுமன்றி ஒரு இலக்கிய ஆவணமாக கொரில்லா கருதப்படுதல் வேண்டும். குறிப்பாக தலையணை சைஸ் நாவல்கள் கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில் கொரில்லா நாவலின் பக்க அளவு மிகவும் சிக்கனமாகக் கையாளப்பட்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. தவிரவும் நாவலாசிரியனின் கச்சாப்பொருள் மீதான கட்டுப்பாடை வெளிப்படுத்தகிறது.

*இந்த சிறுகட்டுரை ()குறிப்புகள் கொரில்லா நாவல் வெளியீட்டு சமயத்தில்(ஜனவரி 2002) எழுதி வாசிக்கப்பட்டது. வேறெந்த சிற்றிதழ்களிலும் வந்ததா என்பது பற்றி ஞாபகமில்லை)

WINNOWED: Gorilla by Shobasakthi, translated by Anushiya Sivanarayanan

WINNOWED: Gorilla by Shobasakthi, translated by Anushiya Sivanarayanan

Monday, January 5, 2009

தமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்-பிரம்மராஜன்

தமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்
பிரம்மராஜன்

தமிழ்ச் சிற்றேடுகள் என்று குறிப்பிடும் போது இனி அவற்றை ஏ4 அளவு மத்திய ஏடுகளிலிருந்து பிரித்தறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ‘‘மீடியம் ஈஸ் த மெஸேஜ்’“ என்று என்னதான் மக்லூஹன் சொன்னாலும் அது தமிழ்ச்சூழலில் இன்று விஷய கனம் என்பதற்கு பதிலாக மேலோட்டமான தளுக்கு என்றே அறியப்பட்டுள்ளது. குறிப்பாக எழுதுவதற்கு ஏதுமில்லாதபோது சில ‘‘பிளாக்’“(வலைப்பூ) எழுத்தாளர்கள் செய்வது போல ‘‘மொக்கை“ப் பதிவுகளைச் செய்து அவைதான் இன்றைக்கு இன்றியமையாத எழுத்து என்று கதைகட்டிவிட சில ஏ4 ஏடுகள் முயல்கின்றன. ஆனால் இந்த வணிக உத்தியை ஊடுருவி பார்க்கத் தெரியாத அந்தகன் அல்ல நவீன வாசகன். உற்பத்திசாதனங்களின் உபரிநன்மைகளால் அவை பார்வைக்கு மட்டுமே பளிச்சென்று தெரிகின்றன.

ஏ4 அளவு ஏடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதற்குக் காரணம் அச்சகங்களினால் ‘‘சும்மாயிருக்க“ முடிவதில்லை என்பது மட்டுமல்ல. எதை வேண்டுமானலும் எழுத வைத்து அதற்கு இலக்கிய சாயம் பூசிவிட முடியும் என்கிற துணிச்சலும் காரணம். மீண்டும் உபரி மதிப்பு குறித்து ஆழ்ந்து அலச வேண்டிய அவசியம் வந்துவிட்டது போல் தெரிகிறது. ‘‘வெட்டி ஒட்டுதல’“ மற்றும் வையக வலைத்தளம் அனைவருக்கும் கிடைக்கும்படியாகியிருக்கும் நிலையுடன் இதை வைத்து ஆய்வோமானால் இன்றைய இலக்கிய வெறுமைக்கு நிறைய பதில்கள் கிடைக்கும். ‘‘சும்மா“வுக்காக விசைப்பலகையை நோக அடிப்பவர்கள் பீதிதரும் அளவுக்கு அதிகரித்திருக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் ஐபிஎம் சாஃப்வேர் நிறுவனம் “பொயட்’“ என்றொரு கையடக்கமான கவிதை எழுதித் தரும் மென்பொருளைத் தந்தது. அதில் நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான். கவிதை யாருக்கு? ஆண்ஞிபெண் காதல், பிரிவு, போன்ற ஏதாவது ஒரு கவிதைக் கருவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண் எங்கே வாழ்கிறாள்-மலையகமா கடற்கரைப் பகுதியா? இந்தத் தகவல்களைக் கொடுத்துவிட்டால் போதும் ஒரு நிமிடத்தில் ஒரு கவிதையை ‘‘பொயட்’“ நமக்குத் தயாரித்துக் கொடுத்துவிடும். இன்றைக்கு எழுதப்படும் பல கவிதைகள் ‘‘பொயட்“ மென்பொருளால் எழுதிவிட முடியும் அளவான தரத்தை மனதில் வைத்து எழுதப்படுவதாகத் தெரிகின்றன. எனவேதான் இன்றைக்கான கவிதைகள் ஏ4 அளவு இதழ்களின் நிரந்தர ‘’ஃபில்லர்’“களாகப் பங்காற்றுகின்றன. கவிஞன் என்ற உபரிப் பெயரடையை(அ)விருப்புமிக்க முள்கிரீடத்தை ஏற்க விரும்பும் கவிதை உற்பத்தியாளனும் ‘‘மொக்கை’“அரட்டை இதழைத் தாங்கி நிற்கும் தூணாக மாறிவிடுகிறான்.
சரி. இவ்வளவு அபரிமிதமாக உரைநடை(அதிலும் தரப்படுத்தப்பட்டது-அந்த காலத்து சிற்றிதழ்(குறிப்பாக ‘‘பிரக்ஞை’“யில் எழுதப்பட்டது போன்ற உரைநடையன்று) எழுதப்பட்டாலும் நல்ல சிறுகதைகள் கிடைப்பது அரிதாக இருக்கும் காரணம் என்ன? ‘‘நல்ல“ என்பதற்கான வரையறை கிளாசிக் என்றே நம்புவோம். நல்ல என்பதைக் கூட விட்டுவிடுவோம். சிறுகதைக்கான குறைந்தபட்ச அலகுகள் கூட வளமான மொழிக்கு தேவையில்லாமல் போய்விடுகிறதா? மயக்கமான சொல்லாடல்களும் ஜடத்துவமான கூறுமுறைகளும்தாம் இன்று சிறுகதைகளின் பண்புகளாகி இருக்கின்றன. ‘‘சீனியர் ரைட்டர்ஸ்“ என்று பிதற்றும் எழுத்தாளர்களுக்கு சிறுகதையின் விஷய கனம் புரியாமல் தடுமாறும் போது இளம் படைப்பாளிகள் நிலை பரிதாபத்திற்குரியது. அவர்களை ஏ4 அளவு இதழ்கள் காப்பாற்றாது.காரணம் இல்லாமல் இல்லை. வெறும் சிறுகதைகள் எழுதினால் பிரபலத்தின் சிகரத்தை அடைய முடியுமா? விசைப்பலகையை சிரமப்படுத்தி, உங்களுக்கு வந்த ‘‘சேட்’“ அரட்டைகளை தமிழ்ப்படுத்தி, “வெட்டி ஒட்டி’“ தலையணை சைசுக்கு செய்யப்படும் நாவலுக்குத்தானே விருதுகள் எல்லாம் தருகிறார்கள். எதைக் குறி வைத்து எழுதுவான் இன்றைய உரைநடைக்காரன்? உரைநடை எழுதுவதற்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன என்பதைக் கேட்டு உச்சி குளிர்ந்தது. படைப்பூக்கத்திற்கான பூடக வழிகளை கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர்-க்கு எழுதும் உரைநடையை வைத்து கண்டுபிடிக்க இயலாது.